e enjte, 14 qershor 2007

ஒரு இரவு

ஒரு சம்சாரிக்கும், அவரது சம்சாரத்துக்கும் இடையில், ஒரு இரவில் நடக்கிற சம்பாசணை. அரேபிய ஆயிரத்தொரு இரவுகள் கதை மாதிரி நீட்டிக்கொண்டே போகலாம்.

(இரவு, இருட்டு. இருவரும் கட்டிலில் படுத்திருக்கிறார்கள்.)

மனைவி: என்னப்பா நித்திரையே?

கணவன்: (நித்திரை மாதிரி கிடப்பமோ அல்லது ஏதும் கதைப்பமோ? வேண்டாம், முழிச்சிருக்கிறன் என்று தெரிஞ்சுதான் இப்படியொரு கேள்வியே வருது. பொய் சொல்லி மாட்டுபடாதே மகனே) ஏன், நித்திரை வருகுதில்லையோ?

மனைவி: இல்லையப்பா. கஸ்தூரியை நினச்சா ஒரே கவலை.

கணவன்: (யார் கஸ்தூரி? ஞாபகமே இல்லையே. யார் என்று கேட்டால் நித்திரை துலைஞ்சுது இன்றைக்கு. கதையை ஓடவிட்டு பார்ப்பம்.) ஏன் கஸ்தூரிக்கு என்ன பிரச்சனை?

மனைவி: அவளை அவள் வீட்டில எல்லாரும் வேலைக்காரி மாதிரி நடத்தியினம்.

கணவன்: (இவ்வளவு நாளும் ஆம்பிளையல் எல்லாம் பெம்பிளையலை வேலைக்காரி மாதிரி நடத்தினம் என்று பொதுவா விட்டுக்கொண்டிருந்தவள், இனிமேல் சோடிசோடியா பெயர் சொல்லி சொல்லப்போகிறாள் போல கிடக்குது.) தன்ரை பிள்ளையல், புருஷனுக்குதானே வேலை செய்யினம்.

மனைவி: அவள் வீட்டில வேறையும் ஆட்கள் இருக்கினம்.

கணவன்: வேற யார்?

மனைவி: கஸ்தூரி, கஸ்தூரியின்ரை புருஷன், புருஷன்ரை பெண்சாதி, பெண்சாதியினரை அம்மா, அப்பா,..........

கணவன்: (மனுஷி என்ன நடந்தாலும் குழம்ப மாட்டாளே, ஏதும் மாறிக்கீறி சொல்லுறாளோ?) புருஷன்ரை பெண்சாதியின்ரை அம்மாவும், கஸ்தூரியின்ரை அம்மாவும் ஒரே ஆள் தானேயப்பா?

மனைவி: (சரியான ஒரு விளக்கெண்ணை ராமசாமியை கட்டியிருக்கிறன்) பகிடி விடுகிறன் என்று லூஸ் மாதிரி கதைக்காதேங்கோ. உங்களுக்கு மூளை குறைவு.

கணவன்: நியூட்டன் கல்குலசை கண்டு பிடிச்சிருக்காமல் இருந்திருந்தால், நான் கண்டு பிடிச்சிருப்பன். அவ்வளவு மூளை முந்தி இருந்தது.

மனைவி: சும்மா புழுகாதேங்கோ. கட்டினாப் பிறகு பார்த்தா அப்படி தெரியல்லையே?

கணவன்: (அதைத்தானே நானும் சொல்லுறன், முந்தி இருந்தது. கட்டினாப் பிறகு, உன்னோட கதைச்சு கதைச்சு எல்லாம் மழுங்கிட்டுது.) சரி, சரி இப்ப உன்ரை பிரச்சனை என்ன?

மனைவி: பிரச்சனை ஒன்றும் இல்லையப்பா. சும்மா ஒரு யோசனைதான். கஸ்தூரியின்ரை புருஷனுக்கு இன்னுமொரு பெண்சாதி இருக்குது.

கணவன்: அப்ப ஒரு பிரச்சனையும் இல்லையே.

மனைவி: என்ன?

கணவன்: அவசரப்பட்டு ஆ, ஊ என்று குழறாத. சட்டப்படி ரெண்டு இருந்தால் குற்றம். வழக்கு போட்டால், முடிஞ்சுது பிரச்சனை. அதைதான் சொல்ல வந்தனான்.

மனைவி: அப்படி கதையை கொண்டு போகேலாது.

கணவன்: என்ன......., அப்படி கதையை கொண்டு போகேலாதோ? நீ என்னத்தைப்பற்றி கதைச்சுகொண்டிருக்கிறாய்?

மனைவி: நீங்கள் என்னெண்டு நினைச்சு கதைக்கிறியல்? இது சண் ரீவீயில புதுசா வார கஸ்தூரி சீரியல்.

கணவன்: (ஆ.......சண் ரீவீ நாடகமோ? என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று நித்திரை மாதிரியே கிடந்திருக்கலாம். இன்றைக்கு எங்க போய் நிக்க போகுதோ?)

மனைவி: என்னப்பா, இந்த கதைக்கு என்ன முடிவு சரியா வரும்.

கணவன்: இதே மாதிரி ஒன்று முந்தியும் வந்ததுதானே.

மனைவி: இல்லயப்பா, இது புதுசு.

கணவன்: செல்வி, செல்வியின்ரை புருஷன், புருஷன்ரை பெண்சாதி என்று ஒரு நாடகம் போய்க்கொண்டிருந்ததே. அது முடிஞ்சுதோ?

மனைவி: செல்வி. அது முடிஞ்சுது.

கணவன்: அப்ப அதே முடிவுதான் இதுக்கும் இருக்கும்.

மனைவி: செல்வி இன்னும் முடியல்லை அப்பா.

கணவன்: நீதானே இப்பதானே முடிஞ்சுது என்று....

மனைவி: செல்வி முடிஞ்சுதுதான், ஆனா தொடருது.

கணவன்: எனக்கு ஒன்றுமே விளங்குதில்லையே.

மனைவி: எப்பதான், எதுதான் விளங்கியிருக்குது? செல்வி இப்ப அரசி என்று போகுது.

கணவன்: அரசி யார்?

மனைவி: செல்வியின்ரை அம்மா.

கணவன்: செல்வின்ரை அம்மா, செல்வி நாடகத்திலும் வந்தவா தானே?

மனைவி: இல்லையப்பா. இது உண்மை அம்மா. அது பொய் அம்மா. அரசிக்கும் செல்வியின்ரை அப்பாவுக்கும்..........

கணவன்: (அய்யய்யோ........நித்திரை போய் மயக்கம் வருகுதே........)

Nuk ka komente: