e enjte, 14 qershor 2007

ஒரு இரவு

ஒரு சம்சாரிக்கும், அவரது சம்சாரத்துக்கும் இடையில், ஒரு இரவில் நடக்கிற சம்பாசணை. அரேபிய ஆயிரத்தொரு இரவுகள் கதை மாதிரி நீட்டிக்கொண்டே போகலாம்.

(இரவு, இருட்டு. இருவரும் கட்டிலில் படுத்திருக்கிறார்கள்.)

மனைவி: என்னப்பா நித்திரையே?

கணவன்: (நித்திரை மாதிரி கிடப்பமோ அல்லது ஏதும் கதைப்பமோ? வேண்டாம், முழிச்சிருக்கிறன் என்று தெரிஞ்சுதான் இப்படியொரு கேள்வியே வருது. பொய் சொல்லி மாட்டுபடாதே மகனே) ஏன், நித்திரை வருகுதில்லையோ?

மனைவி: இல்லையப்பா. கஸ்தூரியை நினச்சா ஒரே கவலை.

கணவன்: (யார் கஸ்தூரி? ஞாபகமே இல்லையே. யார் என்று கேட்டால் நித்திரை துலைஞ்சுது இன்றைக்கு. கதையை ஓடவிட்டு பார்ப்பம்.) ஏன் கஸ்தூரிக்கு என்ன பிரச்சனை?

மனைவி: அவளை அவள் வீட்டில எல்லாரும் வேலைக்காரி மாதிரி நடத்தியினம்.

கணவன்: (இவ்வளவு நாளும் ஆம்பிளையல் எல்லாம் பெம்பிளையலை வேலைக்காரி மாதிரி நடத்தினம் என்று பொதுவா விட்டுக்கொண்டிருந்தவள், இனிமேல் சோடிசோடியா பெயர் சொல்லி சொல்லப்போகிறாள் போல கிடக்குது.) தன்ரை பிள்ளையல், புருஷனுக்குதானே வேலை செய்யினம்.

மனைவி: அவள் வீட்டில வேறையும் ஆட்கள் இருக்கினம்.

கணவன்: வேற யார்?

மனைவி: கஸ்தூரி, கஸ்தூரியின்ரை புருஷன், புருஷன்ரை பெண்சாதி, பெண்சாதியினரை அம்மா, அப்பா,..........

கணவன்: (மனுஷி என்ன நடந்தாலும் குழம்ப மாட்டாளே, ஏதும் மாறிக்கீறி சொல்லுறாளோ?) புருஷன்ரை பெண்சாதியின்ரை அம்மாவும், கஸ்தூரியின்ரை அம்மாவும் ஒரே ஆள் தானேயப்பா?

மனைவி: (சரியான ஒரு விளக்கெண்ணை ராமசாமியை கட்டியிருக்கிறன்) பகிடி விடுகிறன் என்று லூஸ் மாதிரி கதைக்காதேங்கோ. உங்களுக்கு மூளை குறைவு.

கணவன்: நியூட்டன் கல்குலசை கண்டு பிடிச்சிருக்காமல் இருந்திருந்தால், நான் கண்டு பிடிச்சிருப்பன். அவ்வளவு மூளை முந்தி இருந்தது.

மனைவி: சும்மா புழுகாதேங்கோ. கட்டினாப் பிறகு பார்த்தா அப்படி தெரியல்லையே?

கணவன்: (அதைத்தானே நானும் சொல்லுறன், முந்தி இருந்தது. கட்டினாப் பிறகு, உன்னோட கதைச்சு கதைச்சு எல்லாம் மழுங்கிட்டுது.) சரி, சரி இப்ப உன்ரை பிரச்சனை என்ன?

மனைவி: பிரச்சனை ஒன்றும் இல்லையப்பா. சும்மா ஒரு யோசனைதான். கஸ்தூரியின்ரை புருஷனுக்கு இன்னுமொரு பெண்சாதி இருக்குது.

கணவன்: அப்ப ஒரு பிரச்சனையும் இல்லையே.

மனைவி: என்ன?

கணவன்: அவசரப்பட்டு ஆ, ஊ என்று குழறாத. சட்டப்படி ரெண்டு இருந்தால் குற்றம். வழக்கு போட்டால், முடிஞ்சுது பிரச்சனை. அதைதான் சொல்ல வந்தனான்.

மனைவி: அப்படி கதையை கொண்டு போகேலாது.

கணவன்: என்ன......., அப்படி கதையை கொண்டு போகேலாதோ? நீ என்னத்தைப்பற்றி கதைச்சுகொண்டிருக்கிறாய்?

மனைவி: நீங்கள் என்னெண்டு நினைச்சு கதைக்கிறியல்? இது சண் ரீவீயில புதுசா வார கஸ்தூரி சீரியல்.

கணவன்: (ஆ.......சண் ரீவீ நாடகமோ? என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று நித்திரை மாதிரியே கிடந்திருக்கலாம். இன்றைக்கு எங்க போய் நிக்க போகுதோ?)

மனைவி: என்னப்பா, இந்த கதைக்கு என்ன முடிவு சரியா வரும்.

கணவன்: இதே மாதிரி ஒன்று முந்தியும் வந்ததுதானே.

மனைவி: இல்லயப்பா, இது புதுசு.

கணவன்: செல்வி, செல்வியின்ரை புருஷன், புருஷன்ரை பெண்சாதி என்று ஒரு நாடகம் போய்க்கொண்டிருந்ததே. அது முடிஞ்சுதோ?

மனைவி: செல்வி. அது முடிஞ்சுது.

கணவன்: அப்ப அதே முடிவுதான் இதுக்கும் இருக்கும்.

மனைவி: செல்வி இன்னும் முடியல்லை அப்பா.

கணவன்: நீதானே இப்பதானே முடிஞ்சுது என்று....

மனைவி: செல்வி முடிஞ்சுதுதான், ஆனா தொடருது.

கணவன்: எனக்கு ஒன்றுமே விளங்குதில்லையே.

மனைவி: எப்பதான், எதுதான் விளங்கியிருக்குது? செல்வி இப்ப அரசி என்று போகுது.

கணவன்: அரசி யார்?

மனைவி: செல்வியின்ரை அம்மா.

கணவன்: செல்வின்ரை அம்மா, செல்வி நாடகத்திலும் வந்தவா தானே?

மனைவி: இல்லையப்பா. இது உண்மை அம்மா. அது பொய் அம்மா. அரசிக்கும் செல்வியின்ரை அப்பாவுக்கும்..........

கணவன்: (அய்யய்யோ........நித்திரை போய் மயக்கம் வருகுதே........)

e mërkurë, 23 maj 2007

சும்மா இருப்பதே சுகம்

நீங்க என்ன செய்கிறீர்கள்?

சும்மா இருக்கிறேன்.

அப்படியொரு வேலையா? கேள்விபடவேயில்லையே!!

இது திரைப்படத்தில் வந்த ஒரு நகைச்சுவை. யோசித்து பார்த்தால், சும்மா இருப்பது லேசான வேலை மாதிரி தெரியவில்லை.

எனக்கு ஆங்கிலம் படிப்பித்த ஆசிரியை வகுப்பில் வந்து சும்மா இருந்ததாகவே நினைவு. மூன்று நான்கு வருடங்கள் இப்படி நடந்தது. எங்களுக்கு ஆங்கில வகுப்பு ஒரு தண்டணை மாதிரிதான் தெரிந்தது.
ஆசிரியைக்கு ஆயுள் தண்டணை மாதிரி இருந்திருக்கும்.

ஊரில் பல பேர் ஒரு வேலையும் செய்யவில்லை. வீதியோரத்தில் கூடி இருந்து அலசி ஆராய்ந்தார்கள். நாட்டு நிலைமை தெருவில் கூடுவதற்கு உசிதம் இல்லை என்கிற வரைக்கும், தெருவில் சும்மா இருந்தார்கள். அதன் பிறகு, வீட்டுக்குள் சும்மா இருந்தார்கள்.

இவர்களுக்கு குடும்பம், பிள்ளைகள் எல்லாம் இருந்தன. எப்படி குடும்பம் ஓடியது? சரியான புதிராக இருக்குது. அரசாங்கத்தின் இலவச திட்டங்கள் கை கொடுத்திருக்கும்.

புலம் பெயர்ந்த நாடுகளிலும் பகல் முழுக்க ரம்மி அடிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அரசாங்கம் காசு கொடுக்கிறது. ரம்மி அடிக்க காசு கொடுக்கிறார்கள்.

பிள்ளைகளின் பலன்

கடைசி பிள்ளையின் பலன் அப்பாவுக்கு கூடாது.
பிள்ளையின் பலன்படி அவனுக்கு நல்லது, ஆனால் குடும்பத்திற்கு கூடாது.
பிள்ளையால் அம்மாவிற்கு கண்டம் இருக்குது.

இப்படி எத்தனை எத்தனை பலன்களை கேட்டிருக்குறோம்.

ஏனுங்க இப்படி செய்கிறோம்?

குழந்தைகள் பிறந்ததே பெரிய வரம் அல்லவா.
குழந்தைகளாக இருக்கும்வரைதான் அவர்களை கொண்டாட முடியும். பெரியவர்களின் கஷ்டநஷ்டங்களுக்கு குழந்தைகளிலா காரணம் தேடுவது?

e martë, 22 maj 2007

சோதனைகூட எலி

வணக்கம் தமிழ் கூறும் உலகமே!!

எத்தனை முறை Hello World எழுதி முடித்த பின், முதன் முறையாக தமிழில் ஒரு தட்டெழுத்து.

எலி என்னவானால் என்ன? எல்லோருக்கும் முடிவை நோக்கிதான் கவலை. ஒரு எலி போனால் இன்னுமொரு எலி, இந்த பதிவு சரியாக வரவிட்டால் இன்னுமொரு முயற்சி.

எனக்கு தெரிந்தவர் ஒருவர். ஆராய்ச்சிக்காக நூற்றி சொச்ச எலிகள் வாங்கினார். இரவு பகலாக ஏதோ செய்தார். சில நாட்களில் கவலையாக தென்பட்டார். எலி எக்குதப்பாக ஏதோ செய்துவிட்டது போலும். இடையில் அவருக்கும் ஆராய்ச்சி தலைவருக்கும் ஏதோ பிரச்சனை. ஆராய்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார். எலியை நொந்துகொண்டிருந்தார். என்னவானார் என்று தெரியவில்லை.

ஆராய்ச்சி தலைவருக்கு அவர் ஒரு எலி. நிதி வழங்கிய நிறுவனத்திற்கு ஆராய்ச்சி தலைவர் ஒரு எலி.

மொத்தத்தில் நாங்கள் எல்லோருமே சோதனை எலி பட்டாளம்தான்.